திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணவ படுகொலை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்


திண்டுக்கல் மாவட்டத்தில் ஆணவ படுகொலை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
x

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் வசித்து வந்த ஒரு வாலிபர், அப்பகுதியில் பண்ணைகளுக்கு சென்று பால் கறந்து கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார்.

சென்னை

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கூட்டத்து அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (வயது 23). இவர் பண்ணைகளுக்கு சென்று பால் கறந்து கொடுக்கும் கூலி வேலை செய்து வருபவர்.

இந்த வகையில் கணபதிபட்டி கிராமம் சந்திரன் குடும்பத்தாருக்கும், ராமச்சந்திரன், சில ஆண்டுகளாக பால் கறந்து கொடுத்து வந்துள்ளார். இந்த முறையில் சந்திரன் மகள் ஆர்த்திக்கும்(21), (தற்போது கல்லூரி கல்வி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்) ராமச்சந்திரனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர்.

இருவரும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், வெவ்வேறு சாதிப் பிரிவுகளின் காரணமாக ஆர்த்தி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் ராமச்சந்திரன் மீது ஆத்திரப்பட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராமச்சந்திரன் வழக்கம் போல், பால் கறக்கும் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது, ஆர்த்தியின் தந்தை சந்திரன் உட்பட 10 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக ஆர்த்தி, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆர்த்தியின் புகார் மனு அப்பட்டமான, சாதிவெறி ஆணவப் படுகொலை என குற்றம் சாட்டியுள்ளது. மிக மோசமான சாதி வெறிக் குற்றச் செயலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story