ரஷிய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்த இந்தியா

கோப்புப்படம்
கச்சா எண்ணெய் இறக்குமதியை அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா மீண்டும் அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் ரத்துசெய்தன. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷியா கச்சா எண்ணெயை வழங்கியது. இதை பயன்படுத்தி இந்தியாவும் அதிக அளவில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
அந்தவகையில் கடந்த 2018-20-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7 சதவீதமாக இருந்த ரஷியாவின் பங்கு, 2023-24-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரித்தது. அதன் மூலம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இவ்வாறு ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் ரஷிய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியையும் டிரம்ப் நிர்வாகம் விதித்தது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதாவது ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என கூறினார். ஆனால் இதை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மறுத்து உள்ளார். பிரதமர் மோடி, டிரம்பிடம் அப்படி ஒரு போன் உரையாடல் நடத்தியது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் மத்திய அரசு வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்த அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா ரஷிய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் வரை நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் இறக்குமதி செய்து வந்தது. பின்னர் ஜூலை முதல் செப்டம்பர் வரை நாளொன்றுக்கு 16 லட்சம் பீப்பாயாக குறைந்திருந்தது. இது அக்டோபர் மாதத்தில் மீண்டும் அதிகரித்து இருக்கிறது. அதாவது நாளொன்றுக்கு 18 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக சர்வதேச வர்த்தக பகுப்பாய்வு நிறுவனமான கெப்ளர் தெரிவித்து உள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் எண்ணெய் இறக்குமதி குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்க வரி விதிப்பு குறித்த கவலைகள் மற்றும் பருவகால காரணிகள் இதில் முக்கியமானவை ஆகும்.
குறிப்பாக பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்களான எம்.ஆர்.பி.எல்., சி.பி.சி.எல், பி.ஓ.ஆர்.எல் போன்றவற்றில் பராமரிப்பு நடவடிக்கைகள் அதிகரித்ததும் இந்த இறக்குமதி சரிவுக்கு காரணமாகும். தற்போது இந்த பணிகள் முடிவடைந்து இருப்பதுடன், பண்டிகை கால தேவைகளும் அதிகரித்து இருப்பதால் மீண்டும் இந்த இறக்குமதி அதிகரித்து இருப்பதாக கெப்ளர் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்தார்.






