தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை: மேயர் தகவல்

தூத்துக்குடி மாநகரில் மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் பேசியபோது, "தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் உள்ள ஐந்து வார்டுகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள வாடுகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுக்களை ஒழிப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் சிறு சிறு பாதிப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக சீரமைக்க மோட்டார்கள் வைத்து தண்ணீர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ஆதிபராசக்தி நகரில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரே வடிகால் வழியாக தான் தண்ணீர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தாமதமானது. மேலும் காலி மனைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் லாரி மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கொசு உற்பத்தி தடுக்கப்படும். மழை பெய்த 2 மணி நேரத்தில் தண்ணீர் வடிவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. வீடுகளில் பழைய டயர்கள், டப்பாக்கள், குளிர்சாதன பெட்டிகளில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள். இதனால் கொசு உற்பத்தி ஆகும். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள். கேரி பேக் பயன்பாடு சற்று குறைந்து உள்ளது. பொதுமக்கள் நினைத்தால் தான் இதை ஒழிக்க முடியும்.
தூத்துக்குடியில் 4,000 புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளது. தற்போது புதிய வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படுவதால் சில ரோடுகள் உடைக்கப்பட்டு வருகின்றது. அதையும் உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று கூறினார். பின்னர் மேயர் 52 பேர்களிடம் மனுக்களை பெற்றார். இதில் இறப்பு, பிறப்பு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் சரவணகுமார், நகர் நல அலுவலர் சரோஜா, மண்டல ஆணையர் முனீர் அகமது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, சண்முககனி, ஜெயசீலி, ஜெயசுதா, காந்தி மணி, அந்தோணி மாஸ் கிளீன், பட்டுக்கனி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






