திமுகவில் காங்கிரஸ் கேட்பதுபோல், அதிமுகவிடம் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? - பரபரப்பு தகவல்கள்


திமுகவில் காங்கிரஸ் கேட்பதுபோல், அதிமுகவிடம் பாஜகவும் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 8 Jan 2026 6:03 PM IST (Updated: 8 Jan 2026 6:05 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கறாராக பேசியதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது, இந்தக் கூட்டணியில் பாமகவும் இடம்பெற்றுள்ளது.ஆனால், பாமகவுக்கு இத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்துவிட்டதாக கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடனான தொகுதி பங்கீடு குறித்து மவுனம் சாதித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமித்ஷாவை சென்று சந்தித்தார். அப்போது, அவரிடம் தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான 56 தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமித்ஷா வழங்கியதாக கூறப்படுகிறது.அதை எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து சென்று காட்டிய நிலையில், மீண்டும் எஸ்.பி.வேலுமணி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, இவ்வளவு தொகுதிகள் எல்லாம் பாஜகவுக்கு ஒதுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய தகவலை எஸ்.பி.வேலுமணி சொன்னதாக தெரிகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த அமித்ஷா, டெல்லி சென்றவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் நேற்று மாலை டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, இரவு அமித்ஷாவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்து பேசினார்.அப்போது, எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கறாராக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, பாஜகவுக்கு 56 தொகுதிகள் வேண்டும் என்றும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 3 அமைச்சர் பதவிகளும் பாஜகவுக்கு வேண்டும் என்று கூறியதாக பரபரப்பு தகவல்கள் டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளன.

தமிழக அரசியலை பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியதில்லை. இப்போது, திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு கேட்டுவருகிறது. அதேபோல், அதிமுக கூட்டணியிலும் பாஜக, ஆட்சியில் பங்கு கேட்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தேசிய கட்சிகள் இரண்டும் தமிழகத்தில் கால் ஊன்ற தீவிரமாக செயல்படுவதையே இதுபோன்ற நகர்வுகள் காட்டுகின்றன.

1 More update

Next Story