வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை - கனிமொழி எம்.பி.

வடமாநிலங்களில் தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை என கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கனிமொழி எம்.பி. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையேதான் செய்தனர்.
ஆனால், கொரோனா பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டு கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






