விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது: எச்.ராஜா

தமிழகத்தில் அமையும் கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை என்று எச்.ராஜா கூறினார்.
மதுரை,
மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் தி.மு.க. அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் முக்கியமான சிலர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் எங்கேயும் ஓடி, ஒழிய முடியாது. விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் இன்னும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரியவரும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில், ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் உண்மையான ஹீரோவாக செயல்பட்டுள்ளன. பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததால் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். கனவு காண அவர்களுக்கும் உரிமையுள்ளது.
தமிழகத்தில் அமையும் கூட்டணியை விமர்சிக்க தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி அமைந்துள்ளது தி.மு.க.வுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது. கூட்டணி வைப்பதும், தனித்துப் போட்டியிடுவதும் அவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.






