கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்


கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள்
x

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

சென்னை

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06075) மறுநாள் காலை 8.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 4-ந் தேதி இரவு 7.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06076) மறுநாள் காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.

இதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து சென்னை கடற்கரைக்கு வெளிவட்ட ரெயில் (06051) இயக்கப்படுகிறது. டிசம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளில் காலை 9.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம் வழியாக இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைகிறது.

மேலும் விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 30, டிசம்பர் 3, 4, 5-ந் தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரெயில் அன்று காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 30, டிசம்பர் 3, 4, 5-ந் தேதிகளில் பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் அன்று மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.

இதேபோல் விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரெயில் அன்று நள்ளிரவு 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து டிசம்பர் 4, 5, 6-ந் தேதிகளில் நள்ளிரவு 2.05 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரெயில் அன்று காலை 5 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.

மேலும் தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 3, 4-ந் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரெயில் அன்று மதியம் 1.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து 3, 4-ந் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரெயில் அன்று இரவு 9 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.

இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story