இஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் இன்று காலமானார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தனது 84-வது வயதில் மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
1994 முதல் 2003 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இந்தியாவின் பெருமைமிகு ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. விண்ணில் ஏவப்பட்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. விண்வெளித்துறையில் இவரது சாதனைகளை பாராட்டி 27 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர். அவரது மறைவு விண்வெளித்துறைக்கு பெரும் இழப்பாகும்.
கே.கஸ்தூரி ரங்கன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், விண்வெளி துறையினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






