திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை


திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
x

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய சரகம், ராஜவல்லிபுரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 38) என்பவரை அதே ஊரை சுரேஷ்(27), இசக்கிமுத்து(எ) ராஜா(31), ஜெபராஜ்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முதல் இரண்டு குற்றவாளிகளான சுரேஷ், இசக்கிமுத்து(எ) ராஜா ஆகிய 2 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவர்கள் 2 பேருக்கும் நீதிமன்றத்தால் கடந்த 2023-ம் ஆண்டு ஆயுள் நண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3வது குற்றவாளியின் மீதான விசாரணையானது, திருநெல்வேலி 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஜெபராஜ்க்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராபின்சன் நேற்று (28.11.2025) குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, தாழையூத்து காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி (தற்போது பொருளாதார குற்றப்பிரிவு, தூத்துக்குடி மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் சூரசங்கரவேல் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 26 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 84 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 25 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 31 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 25 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 3 நபர்களுக்கும், கூட்டுக் கொள்ளை வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story