பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீதான மின்னல் வேகத் தாக்குதல்- வைகோ வரவேற்பு


பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீதான மின்னல் வேகத் தாக்குதல்- வைகோ வரவேற்பு
x

பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, அதனால் அப்பாவி மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகும் நிலையை எந்த சூழ்நிலையிலும் இந்திய அரசு உருவாக்கிவிடக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று தாக்குதல் நடத்தியது, 'ஆபரேஷன் சிந்தூர்' என்று அழைக்கப்படும் இத்தாக்குதல் மூலம் 9 தீவிரவாத தளங்களை இலக்குகளாக கொண்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல் காமில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நமது இந்தியா ராணுவம் திட்டமிட்டு மின்னல் வேகத்தில் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்து இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிற பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு பாடம் புகட்டி உள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை ராணுவம் தாக்கியுள்ளது. அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன. "பாகிஸ்தானிய ராணுவ இலக்குகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது" என்று இந்திய ராணுவம் அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.

பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, அதனால் அப்பாவி மக்கள் கொடும் துயரத்திற்கு ஆளாகும் நிலையை எந்த சூழ்நிலையிலும் இந்திய அரசு உருவாக்கிவிடக் கூடாது. போர் மூண்டால் இந்தியா ,பாகிஸ்தான் இரு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதையும் இந்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story