பராமரிப்பு பணி: கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

கரூர்-திருச்சி இடையே ரெயில் சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி-கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 17-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மேற்குறிப்பிட்ட தேதிகளில் இந்த வழியாக செல்லும் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயிலானது (வண்டி எண்: 56106) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 17-ந் தேதிகளில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். தொடர்ந்து கரூர்-திருச்சி இடையே ரெயில் சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்: 16843) வழக்கமாக திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வரும். ஆனால் ரெயில்வே மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 17-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மதியம் 2.20 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு டவுன் செல்லும். தொடர்ந்து திருச்சி-கரூர் இடையிலான சேவையானது பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மறுமார்க்கத்தில் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்: 16844) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 17-ந் தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது கரூர் வழியாக முத்தரசநல்லூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். தொடர்ந்து முத்தரசநல்லூர்-திருச்சி இடையிலான ரெயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






