ரூ.4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (01.11.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராயபுரம் மண்டலத்தில், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், வார்டு-59ல், டி.என்.பி.எஸ்.சி சாலையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம் கட்டத்திற்கான கட்டுமானப் பணி, வார்டு-57ல், வ.உ.சி. சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம் கட்டடத்திற்கான கட்டுமானப் பணி மற்றும் வார்டு-54ல், வால்டாக்ஸ் சாலை, திருப்பள்ளி தெரு எதிரில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் வார்டு- 59 ஐசக் தெருவில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம் மற்றும் வார்டு-55, போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில் ரூ.170 லட்சம் மதிப்பீட்டில் சென்னை நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை மட்டும் இடித்து, தரைத்தளத்தில் புதியதாக 5 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடத்துடன் கூடிய புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ. 4.49 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளவும் விரைவாக முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அமைச்சர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடி தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வுகளின்போது, மேயர் ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (வடக்கு) விமலா ராணி, உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர் கற்பகவள்ளி, உதவி கல்வி அலுவலர்கள் தணிகைவேலு, வேதவல்லி, மாமன்ற உறுப்பினர்கள் நவீன், வெ. பரிமளம், ராஜேஷ் ஜெயின், மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






