தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள் - மதுரையில் அமித்ஷா பேச்சு

2026 தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்று வரும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:-
பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையின் சொக்கநாதர், கள்ளழகர், முருகனையும் வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். மதுரை மண் மாற்றத்திற்கான மண். ஜூன் 22-ம் தேதி முருகன் மாநாட்டை இந்த மண்ணில் சிறப்பாக நடத்தி காட்ட வேண்டும். என்னுடைய கண்ணும், காதும் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன.
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். அமித்ஷாவால் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் சொல்லுகிறார். அமித்ஷாவால் முடியாமல் இருக்கலாம். நாட்டு மக்கள் உங்களை தோற்கடிக்க தயாராக உள்ளனர். தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் மாற்றத்தை மதுரை உண்டாக்கும். தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்.
பஹல்காமில் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். மக்களை கொன்றோரை முப்படையின் உதவியோடு மோடி அழித்தார். ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. மறுபடியும் பயங்கரவாதிகள் வாலாட்டினால் அழிக்கப்படுவார் என்பதை நினைவூட்டுகிறேன்.
2024-ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, அரியானாவிலும் வென்றோம். மராட்டியத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க. வெற்றியை பதிவு செய்திருக்கிறது. டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது. ஊழலால் மட்டுமல்ல, சாராயத்தாலும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






