பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் - அன்புமணி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் கரும்புகளின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தோ, அதில் பொங்கல் கரும்பு இடம் பெறுமா? என்பது குறித்தோ தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் என்பதை நம்பி பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பொங்கல் திருநாள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொன்மொழி ஆகும். ஆனால், அரசை நம்பி பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு, ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகத்தால், தை பிறந்தால் வலி தான் பிறக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யப்படும் குளறுபடிகளால் ஆண்டுக்கு ஆண்டு வலி அதிகரிக்கிறது.
பொங்கல் கரும்புக்காக அரசால் நிர்ணயிக்கப்படும் விலை முழுமையாக உழவர்களுக்கு கிடைக்காததும், உழவர்களால் விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பு நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுவதும் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும். ஒரு ஏக்கரில் சராசரியாக 20 ஆயிரம் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்ய முடியும். 20 ஆயிரம் கரும்புகளை நடவு செய்வதற்கு ரூ.80 ஆயிரம், அடுத்த 10 மாதங்களுக்கான வளர்ப்புச் செலவுக்கு ரூ.80 ஆயிரம் என ஏக்கருக்கு ரூ.1.60 லட்சம் செலவாகும். இது தவிர வெட்டுக் கூலி, கட்டுக் கூலி, ஏற்றுக்கூலி ஆகியவையும் உழவர்கள் தலையில் சுமத்தப்படுவதால், அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் வரை செலவாகும்.
ஆனால், இவ்வளவு செலவு செய்து பன்னீர் கரும்பு சாகுபடி செய்தும் கூட உழவர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான கூலி கூட கிடைப்பதில்லை. காரணம், கொள்முதல் முறையில் உள்ள குளறுபடிகளும், ஊழல்களும் தான். ஒரு முழு கரும்புக்கான கொள்முதல் விலையாக போக்குவரத்து செலவினம், வெட்டு கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவற்றையும் சேர்த்து ரூ.35 வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்தக் கரும்புகளை அரசே நேரடியாக கொள்முதல் செய்வதில்லை. மாறாக, இடைத்தரகர்கள் மூலமாகத் தான் அரசு வாங்குகிறது. வெட்டுக்கூலி, கட்டுக் கட்டும் செலவு, ஏற்றுக்கூலி ஆகியவற்றையும் சேர்த்து ஒரு கரும்புக்கு ரூ.18 அல்லது ரூ.19 மட்டுமே உழவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி ஆகியவற்றுக்காக மட்டும் ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.16 முதல் 17 வரை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
உழவர்களிடம் இடைத்தரகர்கள் 20 ஆயிரம் கரும்புகளை கொள்முதல் செய்தால், அதில் 2 ஆயிரம் கரும்புகள் இலவசமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள 18 ஆயிரம் கரும்புகளுக்கு மட்டும் தான் விலை வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், ஓர் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்த உழவர்களுக்கு ரூ.3.25 லட்சம் மட்டுமே கிடைக்கும். அதில் ரூ.2.25 லட்சம் செலவு போனால், ரூ. 1 லட்சம் மட்டுமே மீதம் கிடைக்கும். அதில் நிலத்திற்கான குத்தகை, தண்ணீர் பாய்ச்சும் செலவு, முதலீட்டுக்கான வட்டி ஆகியவற்றையும் கழித்தால் உழவர்களுக்கு ஒரு பைசா கூட லாபம் கிடைக்காது. இத்தகைய சூழலில் பன்னீர் கரும்பு விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் எவ்வாறு இனிப்பாகவும், வலியின்றியும் இருக்கும்?
அதேநேரத்தில், உழவர்களிடமிருந்து பன்னீர் கரும்பை வாங்கி அரசுக்கு கொடுக்கும் இடைத்தரகர்களுக்கு ஒரு கரும்புக்கு ரூ.17 லாபம் கிடைக்கும். அத்துடன் இலவசமாக கிடைக்கும் 10 சதவீத கரும்பையும் சேர்த்தால், ஒரு கரும்புக்கு சராசரியாக ரூ.20 கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 2.26 கோடி கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ரூ.45 கோடி அவர்களுக்கு கிடைக்கும். அதை அவர்களும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பங்கிட்டுக் கொள்வதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆக, பொங்கல் கரும்பு வினியோகம் என்பது அதிகார வர்க்கத்திற்கும், இடைத்தரகர்களுக்கும் இனிப்பானதாகவும், உழவர்களுக்கு கசப்பானதாகவும் மாறிவிட்டது. திமுக ஆட்சியில் எங்கும் நிறைந்திருக்கும் ஊழல் தான் இதற்கு காரணம்.
உழவர்களின் துயரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 6 அடிக்கும் குறைவான உயரம் கொண்ட கரும்புகளை கொள்முதல் செய்யக்கூடாது என்று அரசு அறிவித்திருப்பதால், 7 அடி உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், 7 அடி உயரத்திற்கு கரும்பை விளைவிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. உயரம் குறைந்த கரும்புகளை அதிகாரிகள் நிராகரிப்பதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொருபுறம் பொங்கலுக்கு குடும்ப அட்டைக்கு ஒரு கரும்பு மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது பொங்கல் திருநாளில் இரு கரும்புகளை வைத்து படையலிடும் வழக்கத்திற்கு எதிரானது என்பது மட்டுமின்றி, உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 40 கோடி முதல் 50 கோடி கரும்புகள் விளைவிக்கப்படுகின்றன. இலவச கரும்பு வழங்கப்படுவதற்கு முன்பு வரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சராசரியாக 10 அல்லது 20 கரும்புகளைக் கொண்ட கட்டுகளை வாங்குவார்கள் என்பதாலும், பொங்கலுக்கு இரு வாரத்திற்கு முன்பும், இரு வாரத்திற்கு பின்பும் பொங்கல் கரும்புகளை மக்கள் வாங்கி சாப்பிடுவார்கள் என்பதால் விளைவிக்கும் கரும்பு முழுவதும் விற்பனையாகி விடும். உழவர்களுக்கும் லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது பன்னீர் கரும்பு பொங்கலுக்கு படைக்கும் பொருளாக மட்டும் மாறி விட்டதால், அரசால் கொள்முதல் செய்யப்படும் கரும்புகளைத் தவிர மீதமுள்ள கரும்புகளை வாங்குவதற்கு வணிகர்கள் முன்வருவதில்லை என்பதால் அவை வீணாகி உழவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன. பன்னீர் கரும்பு சாகுபடி தொடர்ந்து இழப்பை ஏற்படுத்துவதால், அது சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்த ஐந்தாண்டுகளில் பல மடங்கு குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பன்னீர் கரும்பு உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை அரசு தான் போக்க வேண்டும். அதற்காக, நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் கரும்புகளின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்; இடைத் தரகர்கள் இல்லாமல் அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்து, போக்குவரத்துச் செலவு, இறக்குக் கூலி தவிர மீதமுள்ள தொகை முழுவதும் உழவர்களுக்கு கிடைக்க வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






