சென்னையில் சீசன் டிக்கெட்டில் பிரிண்டிங் அழிந்து போகிறது: ரெயில் பயணிகள் குற்றச்சாட்டு

சென்னயைில் தினமும் மின்சார ரெயில்களை பயன்படுத்துபவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் பெரும்பாலானவர்களுக்கு வசதியான போக்குவரத்தாக இருக்கிறது. குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்தில், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை தரும் என்பதால், தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதிலும் குறிப்பாக குறைந்தது ரூ.5 கட்டணத்தில் கூட பயணிக்க முடியும்.
இதுபோல அன்றாடம் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்களை காட்டிலும் சீசன் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்கள்தான் அதிகம். அதுதான் லாபம். அந்த வகையில் தினமும் மின்சார ரெயில்களை பயன்படுத்துபவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதில் ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம், 12 மாதங்கள் என்ற கணக்கில் சீசன் டிக்கெட் எடுக்க முடியும்.
அவ்வாறு சீசன் டிக்கெட் எடுப்பவர்களின் யு.டி.எஸ். என்ற செயலியில் எடுப்பது டிஜிட்டலில் இருக்கிறது. ஆனால் அதில் சீசன் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. மாறாக டிக்கெட் கவுண்ட்டர்களில் பேப்பர் பிரிண்டிங் டிக்கெட் எடுத்து வைத்திருப்பவர்கள்தான் அதிகம். அப்படி எடுத்தவர்களில் 6 மாதம், 12 மாதங்கள் சீசன் டிக்கெட் எடுத்த பயணிகளின் பேப்பர் டிக்கெட்டில் பிரிண்டிங் அழிந்து போகிறது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த சீசன் டிக்கெட்டில் எந்த விவரங்களும் இல்லாமல், வெறும் பேப்பர் மட்டுமே இருக்கிறது. டிக்கெட் பரிசோதகரிடம் அதுதான் சீசன் டிக்கெட் என்று எப்படி காட்ட முடியும்?, அதனை பரிசோதகர் ஏற்றுக்கொள்வாரா? என பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து டிக்கெட் கவுண்ட்டரில் கேட்டால், அங்கு பணியில் இருக்கும் ஊழியர் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்கின்றனர். இதனால் பயணிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






