வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிப்பட்டது

கோப்புப்படம்
கோவை தொண்டாமுத்தூரில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டது.
கோவை மாவட்டம் நரசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் ரோலக்ஸ் என அழைக்கப்படும் ஆண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும் சின்னத்தம்பி என்ற கும்கி யானை கெம்பனூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
இந்த சூழலில் ரோலக்ஸ் யானையை பிடிப்பதற்காக வசிம், பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் முதுமலையில் இருந்து நேற்றிரவு கெம்பனூர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டன. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட கும்கி யானைகளின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்திருந்தது. அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்ந்லையில் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த 'ரோலக்ஸ்' யானை பிடிபட்டுள்ளது. இதன்படி புள்ளாகவுண்டன்புதூர் அருகே பெரும்பள்ளம் என்ற இடத்தில் யானை பிடிபட்டது. வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து 4 கும்கி யானைகள் உதவியுடன் 'ரோலக்ஸ்' யானையை பிடித்த வனத்துறையினர், அதனை வாகனத்தில் ஏற்றினர்.






