டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு


டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல்: வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
x
தினத்தந்தி 13 March 2025 9:37 PM IST (Updated: 13 March 2025 9:59 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு வரும் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் நிறுவனம், மதுபான அமைச்சர் தொடர்புடைய இடங்கள் மற்றும் மதுபான விநியோக நிறுவனங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மாயையான அச்சங்களைப் பரப்பி வருகிறார்.

கணக்கில் வராத ரூ.1,000 கோடி பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பான மதுபான ஆலைகளிலிருந்து ஆவணங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

அமைப்பை மோசடி செய்வதன் மூலம் தங்கள் கட்சியின் கஜானாவை நிரப்புவதற்காக தி.மு.க. பொது மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த லஞ்சத்தைப் பெற்றதற்காக, மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. மார்ச் 17, 2025 அன்று சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊழல் நிறைந்த தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் பெருமளவில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்கென்றே நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1,000 கோடி ஊழல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

தி.மு.க. அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று, பா.ஜ.க. சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அதனுடன் இணைத்துள்ளார்.




Next Story