தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி சிறப்பு முகாம்: கமிஷனர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்பு வார்டு கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 29ம் தேதி சிறப்பு முகாம்: கமிஷனர் தகவல்
Published on

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வருகின்ற 29.10.2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து வார்டு பகுதிகளிலும் சிறப்பு வார்டு கூட்டம் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள், நலச்சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்குத் தேவையான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை பணிகள் போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான பராமரிப்பு பணிகள் மாநகரப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில், திறந்தவெளி மற்றும் சாலையோரப் பகுதிகளில் தனியார் நிறுவனப் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல்,

மாநகரப் பூங்காக்களை தன்னார்வ தொண்டு நிறுவனம்/ குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் பராமரித்தல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகரப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள், மாநகராட்சி பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல்,

மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் மற்றும் நீர்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீராதாரங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பொருள்களில் முன்னுரிமை அடிப்படையில் மூன்று கோரிக்கைகளை தேர்வு செய்து விவாதித்து முடிவு செய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் தவறாது கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com