கணவர் மீது சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - நெல்லையில் பயங்கரம்


கணவர் மீது சந்தேகம்; கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - நெல்லையில் பயங்கரம்
x
தினத்தந்தி 31 May 2025 3:59 AM IST (Updated: 31 May 2025 4:01 AM IST)
t-max-icont-min-icon

படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

25 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி கணவரிடம் தகராறு செய்து விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் முத்துலட்சுமி கடந்த 4 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை வீட்டில் பாலசுப்பிரமணியன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பினார். இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துலட்சுமி, தான் ஏற்கனவே கொதிக்க வைத்து இருந்த எண்ணெய்யை பாலசுப்பிரமணியனின் வேட்டியை அவிழ்ந்து வயிற்று பகுதிக்கு கீழே ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் வயிற்று பகுதியில் இருந்து கால் வரை அவரது உடல் வெந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக முத்துலட்சுமி சந்தேகமடைந்தார். இது தொடர்பாகவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமி கொதிக்கும் எண்ணெய்யை தனது கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிந்து முத்துலட்சுமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

1 More update

Next Story