சட்டமன்ற மரபுகளை தொடர்ந்து அவமதிக்கும் தமிழக கவர்னரின் செயல் கண்டிக்கத்தக்கது: நெல்லை முபாரக்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது அரசியலமைப்பு பொறுப்புகளை உணர்ந்து, மாநில அரசின் ஆலோசனைக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2026-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் நான்காவது ஆண்டாகத் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.
சட்டமன்றத்தின் தொடக்க வழிமுறையின்படி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு, அதன் பின்னர் கவர்னர் உரை நிகழ்த்தப்பட்டு, நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆனால், கவர்னர் இந்த மரபை மதிக்காமல், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதை ஏற்க மறுத்த சபாநாயகர் மற்றும் அவை நடைமுறையை எதிர்த்து, தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் வழக்கமான நடைமுறைக்கு மாறானது மட்டுமல்லாமல், கவர்னரின் பதவியின் தன்மைக்கும் முரணானது.
கவர்னர் உரை என்பது ஆளும் அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வு ஆகும். அதை வாசிப்பது கவர்னரின் அரசியலமைப்பு கடமை. ஆனால், கவர்னர் அதைப் புறக்கணித்து, எதிர்க்கட்சிகளைப் போல உரையில் "பிழைகள்" உள்ளன என்று குற்றம் சாட்டுவது அல்லது தனிப்பட்ட கோரிக்கைகளை முன்வைப்பது, அவர் ஏற்றுக்கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
அரசியலமைப்பின் 153-வது மற்றும் 200-வது பிரிவுகளின்படி, கவர்னர் சுயேச்சையாகச் செயல்படும் அதிகாரம் இல்லை. மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டே அவர் செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும், கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இதே போக்கைப் பின்பற்றி வருவது, மாநில அரசுடனான மோதலை வளர்த்து, அரசியலமைப்பு நிறுவனங்களுக்கு இடையேயான உறவை சீர்குலைப்பதாகவே தோன்றுகிறது.
கவர்னரின் இந்தச் செயல் சட்டமன்றத்தின் நீண்டகால மரபுகளை அவமதிப்பதோடு, தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கவர்னர் பதவியின் அடிப்படை நடுநிலைத்தன்மையை சந்தேகத்திற்கு உள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
தமிழக அரசு மற்றும் மக்கள் இத்தகைய அரசியலமைப்பு மீறல்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. கவர்னரின் இந்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு நெறிமுறைகளை மதிக்கும் போக்கை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அரசியல் மோதலைத் தூண்டுவதாகவே உள்ளன.
இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். கவர்னர் தனது அரசியலமைப்பு பொறுப்புகளை உணர்ந்து, மாநில அரசின் ஆலோசனைக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துவதோடு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






