எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி - ராமதாஸ் குற்றச்சாட்டு

ராமதாஸ் இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணிக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், நேற்று கும்பகோணத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. தேவையென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று விருத்தாச்சலம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது. அதுவும் நான் உட்காரும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி எனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை யார் வைத்தார்கள். எதற்காக வைத்தார்கள் என்று விசாரித்து வருகிறோம் என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, பாமகவின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், திடீரென, இப்படியொரு குற்றச்சாட்டை ராமதாஸ் முன் வைத்துள்ளது பாமகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






