தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

கடந்த 14.11.2013 அன்று தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த சப்பானிமுத்து மகன் முத்துமுனியசாமி (வயது 55) என்பவரை தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்தவர்களான கரும்பன் மகன் சுப்பையா(60), சுப்பையாவின் மகன்கள் மாரிமுத்து(36), ராஜ்குமார்(34), சுப்பையாவின் மகள் அந்தோணியம்மாள்(37), சுப்பையாவின் மனைவி மாரியம்மாள்(59) மற்றும் சுப்பையாவின் உறவினர் போலம்மாள்(77) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக தாப்பாத்தி பகுதியில் வைத்து கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியும் அதை தடுக்க வந்த முத்துமுனியசாமியின் மகன் சேர்மக்கனி(36) என்பவரையும் தாக்கியதில் முத்துமுனியசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன நபர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் நேற்று மேற்சொன்ன நபர்களில் சுப்பையா மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேருக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் மற்ற 4 நபர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய மாசார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல்ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் மாரிச்சாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com