தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 3 பேரை துரத்தி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி நேதாஜிநகர் பகுதியில் ஒரு வாலிபரை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சேர்ந்து நிறுத்தி, அந்த வாலிபர் அணிருந்த தங்க செயினை பறிக்க முயற்சித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜிநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தபோது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் மேற்சொன்ன வாலிபரை நிறுத்தி அவரிடம் பேசுவது போல அவர் அணிருந்த தங்க செயினை பறிக்க முயற்சித்துள்ளனர். இதனை சுதாரித்துக் கொண்ட அந்த வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று தப்பி ஓடி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவேல்பாண்டியன் மற்றும் சண்முகசுந்தரம் தலைமையிலான சிப்காட் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மீளவிட்டான் காட்டுப் பகுதிக்குள் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் ஓடுவதை பார்த்து மேற்சொன்ன போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜெகநாதன் மகன் ஜெயஆனந்த் (வயது 21), முருகேசன் மகன் ஜான்சன்(24) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சோனிராஜா மகன் சண்முகவேல்(19) ஆகியோர் என்பதும் அவர்கள் மேற்சொன்ன வாலிபரிடம் செல்போனை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. உடனடியாக மேற்சொன்ன காவல்துறையினர் மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மேற்சொன்ன சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகளை துரத்தி பிடித்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த சிப்காட் காவல் நிலைய போலீசாரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






