இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 May 2025 8:04 PM IST
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் திடீரன கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தனர்.
- 16 May 2025 7:29 PM IST
நடிகர் அஜித்தின் புதிய படம் 2025 நவம்பரில் தொடங்க உள்ளது. அது 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என்று அவர் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
- 16 May 2025 6:54 PM IST
ரஷியா உடனான அமைதி பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்து விட்டது என துருக்கி மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 16 May 2025 6:46 PM IST
பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியை 2029-ம் ஆண்டுக்குள் பெரும் அளவில் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பில், பாதுகாப்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி உள்ளது. இந்நிலையில், 2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் உலகின் மிக பெரிய நாடாக இந்தியாவை வளர்ச்சியடைய செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
- 16 May 2025 6:01 PM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் உடன்குடி அனல்மின்நிலையம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டில் விடப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் ஒருவரின் மெயிலுக்கு அனல்மின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் நீண்ட நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. எனினும், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16 May 2025 5:25 PM IST
பா.ம.க. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11-ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வேலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, தேனி, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடைசி 10 இடங்களை பிடித்திருக்கின்றன.
அவற்றில் தேனி, நாகை ஆகிய இரு மாவட்டங்களை தவிர மீதமுள்ள 8 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டை சேர்ந்த மாவட்டங்கள் ஆகும். அதேபோல், 11-ம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில் கடைசி 10 இடங்களை பிடித்த மாவட்டங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகியவை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இவற்றில் புதுக்கோட்டை, நீலகிரி தவிர மீதமுள்ள மாவட்டங்கள் வட தமிழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள். தேர்ச்சி விகிதத்திலும், ஒட்டுமொத்த கல்வி நிலையிலும் வட தமிழகம் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட மாற்றமல்ல. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடிக்கிறது.
வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப்படவில்லை. வட மாவட்டங்களுக்கு கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை. கல்வியில் வட தமிழ்நாடு முன்னேறவில்லை என்றால், எந்த துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது. இதனை தமிழக அரசு உணர்ந்து கொண்டு வட மாவட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், அந்த மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்பு திட்டங்களை வகுத்து தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- 16 May 2025 5:07 PM IST
ரோகிங்கியா அகதிகள் மத்திய அரசால் கொண்டு செல்லப்பட்டு, அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனர் என குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. ரோகிங்கியா தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது. அந்த வழக்குடன் சேர்த்து இது விசாரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
- 16 May 2025 4:45 PM IST
சென்னையில் நாளை (17.05.2025) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னீர்க்குப்பம்: கன்னபாளையம், ஆயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி.
ராமாபுரம்: ராயலா நகர் 1 மற்றும் 2-வது தெரு, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, பாரதி சாலை, பாரதி நகர், ஆண்டவன் நகர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், திருமலை நகர், முகலிவாக்கம் பகுதி, சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், முகலிவாக்கம் மெயின் சாலை, காமாட்சி நகர், கிருஷ்ணவேணி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, ஏ.ஜி.எஸ். காலனி
- 16 May 2025 4:31 PM IST
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்த வார தொடக்கத்தில் கூறும்போது, காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் குழுவை அழிக்கும் நோக்கில் காசா முனையில் இஸ்ரேலின் போர் தீவிரப்படுத்தப்படும் என கூறினார்.
இந்த சூழலில் காசா முனையின் டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் ஆகிய நகரங்களின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தாக்குதல் நடந்தது. காசா முனை பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 64 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 48 பேரின் உடல்கள் இந்தோனேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மற்ற 16 பேரின் உடல்கள் நாசர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
- 16 May 2025 4:00 PM IST
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வரும் 19ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் பட்டியலை பெறலாம்.