இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Aug 2025 4:36 PM IST
மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை - வைகோ அறிவிப்பு
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
- 22 Aug 2025 4:35 PM IST
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ம் தேதி வாக்கில், ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 22 Aug 2025 4:29 PM IST
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு...சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி பனையூர் பாபு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 22 Aug 2025 3:52 PM IST
புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா?...தற்போது பிரபல நடிகை
தற்போது ஒரு நட்சத்திர கதாநாயகியின் குழந்தை பருவ புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் மலையாளத்தில் பாப்புலராக இருக்கும் நடிகை. அவர் தமிழிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் 4 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் அதிகம்.
- 22 Aug 2025 3:18 PM IST
18 நாட்களுக்கு பிறகு எட்டிய முடிவு...டோலிவுட்டில் படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம்
18 நாள்களாக நீடித்த தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. படப்பிடிப்புகள் இன்று மீண்டும் தொடங்கி உள்ளன.
- 22 Aug 2025 2:55 PM IST
விஜயகாந்த் குறித்த விஜய் பேச்சுக்கு சண்முக பாண்டியனின் பதில்
நேற்று மதுரையில் நடைபெற்ற தவெக-வின் 2 மாநாட்டில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை , விஜய், அண்ணன் என அழைத்திருந்தநிலையில், அது குறித்து விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் சில கருத்துகளை தெரிவித்தார்.
- 22 Aug 2025 2:24 PM IST
திரையுலகில் சோகம்...பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்
பஞ்சாபி திரையுலகைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகரான ஜஸ்விந்தர் பல்லா( 65) காலமானார். மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Aug 2025 1:53 PM IST
மாலை 4 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூரில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
- 22 Aug 2025 1:41 PM IST
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு - ராகுல் காந்தி வரவேற்பு
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
விலங்கு நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நகர்வை குறிக்கும் வகையில், தெருநாய்கள் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வரவேற்கிறேன்.
இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும், அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















