ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு

விடுப்பு அளிக்காததால் ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
ரெயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் மீது வழக்குப்பதிவு
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு சமீப காலமாக கழுத்து வலி இருந்ததால் தனக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்று மருத்துவ சான்றிதழுடன் விடுப்பு கேட்டு சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான யுவராஜ், கடந்த 17-ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே தாம்பரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது யுவராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 17-ந்தேதி மதியம், தமிழக டி.ஜி.பி.க்கு தனது இ-மெயில் முகவரியில் இருந்து ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கடந்த 3 மாதங்களாக எனக்கு பணி வழங்க கூடாது என்று அதிகாரிகள் உத்தரவு போட்டுள்ளனர். மேலும் சம்பளமும் வழங்கவில்லை, மருத்துவ விடுப்பு கேட்டதற்கு தர மறுத்த தாம்பரம் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த 2 உயர் அதிகாரிகளே என்னுடைய சாவுக்கு காரணம் என்று இ-மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர் தற்கொலை விவகாரத்தில், கிளை மேலாளர்களான கோவிந்தராஜ் மற்றும் சொர்ணலதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com