அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு இடம்.. ஓபிஎஸ்-க்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி சூசகம்


அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு இடம்.. ஓபிஎஸ்-க்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி சூசகம்
x

கோப்பு படம் (பிடிஐ)

எடப்பாடி பழனிசாமி கூறுவதை பார்க்கும்போது, டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் புதுக்கோட்டை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அமித்ஷாவை சென்று சந்திக்கவில்லை. அவருக்கு பதிலாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 முறை சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலை பெயர்கள் குறிப்பிட்டு அமித்ஷா வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையும் 50-க்கும் மேல் பட்டியலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. முக்கியமாக, தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் டெல்லி திரும்பிய நிலையில், நேற்று இரவு அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை தமிழகம் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அவரிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி கூறுவதை பார்க்கும்போது, டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அந்த கூட்டணியில் சேரமாட்டேன் என்று கூறிவந்த டிடிவி தினகரன், சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, "தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்பதெல்லாம் எனது கண்களுக்கு தெரியாது" என்று கூறியிருந்தார். இதனால், கூட்டணி விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இறங்கிவருவதுபோல் தெரிகிறது.

1 More update

Next Story