எங்கள் பொதுச்செயலாளர் யாரை சாமி என்று சொல்கிறாரோ அவரை நாங்கள் கும்பிடுவோம் - செல்லூர் ராஜூ

அடுத்த கட்சிக்கொடியை அ.தி.மு.க.வினர் தூக்கியதாக என்றாவது வரலாறு உண்டா என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை மாவட்டம் விளாங்குடியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விஜய்க்காக குரல் கொடுத்தவர், எடப்பாடி பழனிசாமி. எனவே அவர் வந்ததால் நாங்கள் எங்கள் கட்சிக்கொடியை காட்டினோம் என்று த.வெ.க. தொண்டர்கள் கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை விஜய் தொண்டர்கள் விரும்புகிறார்கள். தன்னெழுச்சியாக தங்கள் கட்சிக்கொடியை காட்டுகிறார்கள். தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோல்தான் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. குறித்து விமர்சிக்கிறார்.

தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி எங்கள் கட்சி கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்கள் யாராவது அடுத்த கட்சிக்கொடியை தூக்கியதாக வரலாறு உண்டா? கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளில் தூக்கி கொண்டாடுவோம். எங்கள் பொதுச்செயலாளர் யாரை சாமி என்று சொல்கிறாரோ அவரை நாங்கள் கும்பிடுவோம்.

திருமாவளவன் தன் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். வி.சி.க. வன்முறை இயக்கத்தோடு சேர்ந்துவிட்டது. தன் கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று விஜய்க்கு திருமாவளவன் அறிவுரை சொல்கிறார். ஆனால், தன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை திருமாவளவன் கண்டிக்க தவறுகிறார். சேர்ந்த இடம் தி.மு.க. என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அப்படித்தான் இருப்பார்கள். தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் ஒரு கெத்து. அவருக்கு இணை யாரும் கிடையாது. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். கொடி நாட்டியவர். அவருடன் எந்த தலைவரையும் ஒப்பிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com