"விஜய்யை முதல்-அமைச்சராக அமர வைப்போம்" - த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த்

2026 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
கோவை,
த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் நேற்று கோவை சென்றார். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், கோவை-அவினாசி ரோடு லீமெரிடியன் ஓட்டலில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள நட்சத்திர விடுதி முன்பு தொண்டர்கள் குவிந்தனர். வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் நின்று இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என விடுதி ஊழியர்களும் காவல்துறையினரும் அறிவுரை வழங்கினர். இருப்பினும் வழி விடாமல் TVK..TVK..TVK.. என தொண்டர்கள் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனிடையே கோவையில் 2ம் நாளாக நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 8,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தொண்டர்களை ஒழுங்குபடுத்தி உள்ளே பவுன்சர்கள் அனுமதித்தனர். தவெக தலைவர் விஜய் வரும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி விஜய் வரக்கூடிய சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வழிநெடுகிலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெறும் பகுதியில் தடுப்புகளை தகர்த்து தொண்டர்கள் உள்ளே நுழைந்தனர். மேலும் பந்தல்கள் மீது ஏறி உள்ளே குதிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் தவெக நிகழ்ச்சிக்கு வந்த விஜய், மேடையிலிருந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தவெக கருத்தரங்கின் 2ஆம் நாளில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தவெக முகவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், "த.வெ.க. முகவர்கள் கருத்தரங்குக்கு யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை. மாநாட்டின்போதும் சரி, இப்போதும் சரி, யாருக்கும் பணம் தரவில்லை.. கருத்தரங்கில் கட்டமைப்பு இல்லை என ஊடக விவாதங்களில் பேசுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு, விஜய்யை முதல்-அமைச்சராக அமர வைப்போம் என உறுதி ஏற்போம்.
மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது, அதை மறுக்க முடியாது. யாருக்கும் பயப்பட வேண்டாம், நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்கு தான். மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்" என்று கூறினார்.






