கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட தயங்குவது ஏன்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி


கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட தயங்குவது ஏன்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
x

பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

சென்னை

கோவில் சொத்துகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

கோவில் சொத்துகள்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மடங்கள், கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், நிதி மற்றும் நிலங்கள் தொடர்பான விவரங்கள், அறநிலையத்துறையின் உத்தரவுகள், அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தி்ல் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன் மூலமாக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே வருவாய்துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் வாயிலாக மாநிலத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் அறிய முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

வழிப்பறி:

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் வழிப்பறி செய்து விடுவார்கள் என்பதற்காக யாராவது தங்க நகை அணியாமல் செல்கிறார்களா? தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகளை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? கோவில்களின் சொத்துகளை அனைவரும் தெரியும் வண்ணம் இதுபோல வெளியிடும்போது, நிலங்களை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா? மனுதாரர் அறநிலையத்துறையின் தணிக்கை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என்கிறார். அதை வெளியிடுவதில் என்ன பிரச்சினை உள்ளது? அறநிலையத்துறை கமிஷனரின் தனிப்பட்ட விவரங்களையோ, அதிகாரிகளின் சொத்து விவரங்களையோ வெளியிட வேண்டும் என சொல்லவில்லையே?'' என்று சரமாரியாக கேள்விகளை கேட்டார்.

பதில் மனு:

பின்னர், மனுதாரர் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்ட ரீதியாக பொது ஆவணங்கள் ஆகும். அவற்றை வெளியிட முடியாது என மறுக்க முடியாது. எனவே, எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்ய முடியும்? எந்தெந்த தகவல்கள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை நவம்பர் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story