வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு


வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த பெண் அக்லிமா அக்தர் (வயது 32). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அப்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.

டாக்காவில் இருந்து தனியார் விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அக்லிமா அக்தருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், விமான நிலைய மருத்துவக் குழுவினர், தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அக்லிமா அக்தரை பரிசோதித்தனர். ஆனால் விமான இருக்கையில் சாய்ந்த படி அக்லிமா அக்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story