விலைவாசி குறையும்; வாழ்க்கைத்தரம் உயரும்!


விலைவாசி குறையும்; வாழ்க்கைத்தரம் உயரும்!
x

2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 56-வது கூட்டத்தின் முதல் நாளிலேயே மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாட்டு மக்கள் மனம் குளிரும் வகையில் பல பொருட்களின் விலை குறையும் வகையிலும், மக்களின் செலவுகள் குறைந்து பணத்தை மிச்சப்படுத்த வகை செய்யும் அளவிலும் ஜி.எஸ்.டி. வரி குறைப்புகளுக்கான மாற்றங்களை அறிவித்தார். எடுத்த எடுப்பிலேயே அவர், "சாதாரண மனிதர்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த வரிகளெல்லாம் போய்விட்டது. பெரும்பாலான பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை அதிக அளவில் வழங்கும் தொழில்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது" என்று நல்ல தொடக்கத்தை கூறிவிட்டு, நாட்டு மக்களுக்கு விலைவாசி குறைந்து அவர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தப்போகும் பொருட்களின் புதிய வரி பட்டியலை வெளியிட்டார்.

2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் 66 லட்சத்து 50 ஆயிரம் பேர் பதிவு செய்யப்பட்ட வரி தாக்கல் செய்யும் வளையத்தில் இருந்தனர். ஆனால் இப்போது அதன் வரம்பு விரிவாகி பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே 51 லட்சம் பேர் ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள். இதனால் வருமானமும் இரட்டிப்பாகிவிட்டது. இந்த வருவாயை மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற சதவீதத்தில் பகிர்ந்துகொள்கின்றன. தற்போது வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு 60 சதவீதம் என்றும் மத்திய அரசுக்கு 40 சதவீதம் என்றும் பிரித்துக்கொள்ளவேண்டும். வரி விகிதத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இருந்தாலும் மக்களுக்கு பலன் அளிக்கும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 5, 12, 18, 28 என்ற சதவீதங்களில் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் இனி இரண்டு விகிதங்களில் அதாவது 5 மற்றும் 18 என்ற விகிதங்களில் மட்டுமே வசூலிக்கப்படும். சிகரெட், பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு தற்போது உள்ள வரியே தொடரும். இன்சூரன்ஸ் பிரீமியத்துக்காக இதுவரை விதிக்கப்பட்ட 28 சதவீத வரிகளை குறைக்கவேண்டும் என்று எல்லோரும் கேட்ட நிலையில் வரி குறைப்பு ஏன்? வரியே இல்லை என்று அறிவிப்பு வந்துவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரி முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் சோப்பு போன்ற பல பொருட்கள் 5 சதவீத வரி பட்டியலில் வந்துவிட்டது. இதுபோல மருத்துவம் மற்றும் விவசாய பொருட்களுக்கு வரி இனி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி., பிரிட்ஜ், 32 அங்குலத்துக்கு மேலான டி.வி. மட்டுமல்லாமல் 1,200 சி.சி.க்கு உட்பட்ட பெட்ரோல் கார்கள், 1,500 சி.சி.க்கு உட்பட்ட டீசல் கார்கள், 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போன்ற நடுத்தர மக்களின் கனவு வாகனங்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த வரிமாற்றங்களால் வியாபாரம் பெருகும். மக்கள் ஆசைப்பட்ட பொருட்களையெல்லாம் குறைந்த விலையில் வாங்கமுடியும். பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரிய அளவில் ஜி.எஸ்.டி. சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாமானியர்கள், விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நடுத்தர குடும்பத்தினர், பெண்கள், இளைஞர்கள் பயனடைவார்கள். மொத்தத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பயனடையும் நல்ல வரி மாற்றம் இது.

1 More update

Next Story