சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யாருக்கு கிடைத்த வெற்றி?


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு யாருக்கு கிடைத்த வெற்றி?
x
தினத்தந்தி 22 Nov 2025 5:30 AM IST (Updated: 22 Nov 2025 5:31 AM IST)
t-max-icont-min-icon

மொத்தத்தில் இது கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதகமான தீர்ப்புதான்.

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் கூறிய பல அறிவுரைகள் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினருக்கும் இன்றளவும் வழிகாட்டுதலாக விளங்குகின்றன. ஒரு நாள் தினத்தந்தி பத்திரிகையின் செய்தி ஆசிரியர், 8 காலம் செய்தி என்று கூறப்படும் முதல் பக்க தலைப்பு செய்திக்காக ஒரு தலைப்பை எழுதியிருந்தார். அதில், கூறப்பட்ட கருத்து பற்றி சி.பா.ஆதித்தனார் தெரிவிக்கும்போது, “நீங்கள் கூறவரும் கருத்து ஒன்று கருப்பாக இருக்கவேண்டும் அல்லது வெள்ளையாக இருக்கவேண்டும். ஆனால் இதுபோல இரண்டும் இல்லாமல் அதற்கு இடைப்பட்ட பிரவுனாக இருக்கக்கூடாது” என்றார். அந்த நிலைதான் இப்போது மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த விளக்கத்தில் பிரதிபலிக்கிறது.

கவர்னர், மசோதாக்கள் மீது குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிவெடுப்பதில்லை என்று தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி அளித்த தீர்ப்பில், கவர்னர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்று கூறியதோடு கவர்னருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள்ளும், ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள்ளும் முடிவெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த தீர்ப்பில் தெளிவுரை வேண்டும் என்று கோரி ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகள் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதை நேற்று வரை தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய், நாளை மறுதினம் முதல் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கப்போகும் ஜே.சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து ஒருமனதாக ஜனாதிபதி கேட்ட 14 கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளது.

111 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் ஜனாதிபதி கேட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டு தனது கருத்துகளாகத்தான் தெரிவித்துள்ளது. முதல் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், ஒப்புதலுக்காக சட்டசபையில் இருந்து வரும் மசோதாக்கள் விவகாரத்தில் கவர்னருக்கு 3 தேர்வுகள் உள்ளன. முதலாவதாக அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். இரண்டாவதாக அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பலாம். மூன்றாவதாக அதற்கு ஒப்புதல் வழங்காமல் சட்டசபைக்கே திருப்பி அனுப்பலாம். இதை கூறிவிட்டு ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க விதித்த காலக்கெடுவை செயலற்றதாக்கிவிட்டது.

கவர்னரின் முடிவு நீதிமன்றத்துக்கு உட்பட்டது அல்ல. ஆனால் சட்டசபை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் கிடப்பில் வைத்திருந்தால் அந்த செயல்பாட்டை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தி தேவைப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஒரு விஷயத்தில் வரையறுக்கப்பட்ட அளவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளது. இப்படி மதில் மேல் பூனை கதையாக இருதரப்புக்கும் சாதகமாக சில விளக்கங்களை கோர்ட்டு கூறியிருந்தாலும், இந்த தீர்ப்பு பொதுவாக மத்திய அரசாங்கத்துக்கும், கவர்னர் மாளிகைகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. ஆனால் கவர்னர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆக இனி கவர்னர்களுக்கும், பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே மேலும் பல மோதல்களுக்கு இந்த தீர்ப்பு வாசலை திறந்துவிட்டது. மொத்தத்தில் இது கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதகமான தீர்ப்புதான்.

1 More update

Next Story