அமெரிக்காவின் சரித்திரம் ஆட்டம் காணுமா?

எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சி அடுத்த தேர்தலில் வரலாறு படைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
உலகில் மிகப்பெரிய வல்லரசாக திகழ்வது அமெரிக்கா. அங்கு இப்போது குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் 2-வது முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 79 வயதான டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பஞ்சம் இல்லை. 2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் டிரம்ப்தான் அதிக வயதானவர். அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு முறைதான் பதவி வகிக்க முடியும் என்றாலும், இந்தமுறை தொடக்கத்தில் இருந்தே அவரது அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக ஆக்குவேன் அதாவது, "மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்" என்பதையே தன் லட்சிய முழக்கமாக கொண்டு 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் குதித்தார். இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு வலதுகரமாக இருந்து தீவிர பிரசாரம் செய்தவர் உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா கார் நிறுவன உரிமையாளரும், மிகப்பெரிய தொழில் அதிபருமான எலான் மஸ்க்தான். டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு அதிக நிதிகொடுத்தவர் எலான் மஸ்க் என்பது பரபரப்பான செய்தியாக இருந்தது.
இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக டிரம்ப்பும், ஜனநாயகக்கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச்சேர்ந்த கமலா ஹாரீசும் போட்டியிட்டாலும் டிரம்ப்பே வெற்றிபெற்றார். டிரம்ப் பதவியேற்றவுடன் செயல்திறன் மேம்பாட்டுத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதற்கு முக்கிய ஆலோசகராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையேயான உறவு வெகுகாலம் நீடிக்கவில்லை. டிரம்ப்பின் பல நடவடிக்கைகள் எலான் மஸ்க்குக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக டிரம்ப் கொண்டுவந்த பெரிய, அழகிய மசோதா என்ற அமெரிக்க வரிச்சலுகை மசோதா மற்றும் குடியேற்ற மசோதா ஆகியவை அமெரிக்காவுக்கு பெரும் கேடுவிளைவிக்கும் என்று விமர்சித்த எலான் மஸ்க், இதுபோன்ற நடவடிக்கைகளால் அமெரிக்காவின் கடன்சுமை அதிகரிக்கும் என்று கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இருவரும் பொதுமேடையிலேயே ஒருவருக்கொருவர் கருத்துமோதலில் ஈடுபட்டனர். எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்க தனது 'எக்ஸ்' தளத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார். அதில் அவருக்கு பெரும் ஆதரவு கிடைக்கவே, அடுத்த நகர்வுக்கு சென்றார். ஜூலை 4-ந்தேதி அமெரிக்க சுதந்திரத்தினத்தன்று ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா என்ற கட்சியை தொடங்கவேண்டுமா? என்று மீண்டும் சமூகவலைதளத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியதில், அதில் கலந்துகொண்ட 12 லட்சத்து 48 ஆயிரம் பேரில் 65.4 சதவீதம் பேர் புதிய கட்சி தொடங்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததைத்தொடர்ந்து, அடுத்தநாளே அமெரிக்கா கட்சி என்ற தன் கட்சியை தொடங்கினார்.
மூன்றில் 2 பங்கு அமெரிக்க மக்கள் புதிய கட்சியை விரும்புகிறார்கள் என்று எலான் மஸ்க் சொன்னாலும், அமெரிக்க வரலாற்றில் இதுவரை மக்கள் இருகட்சிகளைத்தவிர அதாவது குடியரசு கட்சி, ஜனநாயக கட்சியைத்தவிர மூன்றாவது கட்சிக்கு எப்போதுமே ஆதரவு தந்ததில்லை. இந்த இரு கட்சிகளைத்தவிர மற்ற எந்த கட்சியும் தேர்தல் அலையில் நீந்தி மேலே வரமுடியவில்லை. 3-வது கட்சி சொல்லிக்கொள்ளும்படியாக மக்களின் ஆதரவைப்பெறவில்லை. எலான் மஸ்க்கின் அமெரிக்கா கட்சி அடுத்த தேர்தலில் வரலாறு படைக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஒருவேளை அமெரிக்கா கட்சி அந்த தேர்தலில் வெற்றிபெற்றாலும், எலான் மஸ்க் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்ற காரணத்தினால் அவரால் ஜனாதிபதியாக முடியாது.






