வின்னரான வின்பாஸ்ட்


வின்னரான வின்பாஸ்ட்
x
தினத்தந்தி 30 July 2025 3:43 AM IST (Updated: 31 July 2025 12:44 PM IST)
t-max-icont-min-icon

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனியாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.


தமிழக அரசு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அடிக்கடி நடத்தி வருகிறது. இத்தகைய மாநாட்டில் கலந்து கொள்ளும் தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறோம் என்று முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. அந்த அடிப்படையில் தொழிற்சாலைகளை நிறுவி, வேலைவாய்ப்புகளை வழங்கி உற்பத்தியை தொடங்குவதில்தான் உண்மையான வெற்றி ஏற்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டு ஜனவரி 7, 8- ந் தேதிகளில் சென்னையில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீட்டில் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.85 லட்சம் கோடி பொருளாதார இலக்கை அடைவதற்கான தொலைநோக்கு ஆவணத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு விட்டன என்ற மன நிறைவோடு தமிழக அரசு நின்று விடவில்லை.

மாநாடு முடிந்த அடுத்த நாளே, தொழில்துறை முதன்மை செயலாளர் அருண்ராய் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் விரைவில் வழங்கி, எல்லா உதவிகளையும் செய்து தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசு உத்தரவிட்டது.

இந்த மாநாட்டில் வியட்நாம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் கார் தொழிற்சாலை தொடங்க நீண்ட கால முதலீடாக ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 50-வது நாளிலேயே முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த தொழிற்சாலை அமைந்ததன் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அதற்காக சில நாட்களுக்கு முன்பு கூட அந்த பகுதி பாலிடெக்னிக்குகளில் படித்த 500 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மிகவும் வெற்றிகரமாக கட்டுமான பணிகள் முடிந்து நாளை (31-ந்தேதி) இந்த கார் நிறுவனத்தின் உற்பத்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இப்போது அதே நாளில் திறக்கப்படுமா? சில நாட்கள் தள்ளிப்போகுமா? என்று தெரியவில்லை. இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய திட்டம் இருக்கிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 15 மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவி உற்பத்தியை தொடங்குவது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. வின்பாஸ்ட் நிறுவனம் தன் பெயருக்கு ஏற்றாற்போல வின்னர் ஆகிவிட்டதாகவே பாராட்டப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் கார்களை வெளிநாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்ய வசதி இருக்கிறது. தூத்துக்குடியில் இருக்கும் துறைமுகம், விமான நிலையம், ரெயில் நிலையம் மற்றும் அனைத்து நகரங்களையும் இணைக்கும் சாலை வசதியும் இருப்பதால் இங்கு மேலும் பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனியாக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

1 More update

Next Story