வங்கக்கடலில் உருவாகும் ‘மோன்தா' புயல்: தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா..?

வங்கக்கடலில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயல் உருவாகிறது. இதற்கு ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏமாற்றியது. இந்த நிகழ்வு புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட சூழலில், தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது அதே பகுதிகளில் நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மழையை கொடுக்குமா?
வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தமிழகத்துக்கு அருகில் வந்து நகருமா? அல்லது ஆந்திராவுக்கு சென்றுவிடுமா? என்பது இப்போது வரை உறுதியாகவில்லை. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வராமல் அப்படியே திறந்த கடல் பகுதி வழியாக ஆந்திரா நோக்கி சென்றால், பலத்த மழையை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு தவறவிட்டுவிடும். மாறாக மிதமான மழையே இருக்கும்.
அதுவே, புயல் வடதமிழகத்தையொட்டி நகர்ந்து, பின்னர் ஆந்திரா சென்றால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இந்த புயல் மழையை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்புக்கு ஓரிரு நாட்களில் விடை தெரிந்துவிடும். இந்த புயலால் வடமாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
‘மோன்தா’ புயல்
பொதுவாக புயல் உருவாகும்போது, அதனை அடையாளப்படுத்துவதற்காக பெயர் சூட்டப்படுகிறது. அந்தவகையில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, ‘மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. வானிலை ஆய்வு மையம் புயல் உருவான பிறகே அந்த பெயரை அறிவிக்கும். ‘மோன்தா' என்ற பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும். இந்த பெயருக்கு ‘அழகான மலர்' அல்லது ‘மணம் வீசும் மலர்' என்று அர்த்தம் ஆகும்.
ஒருவேளை புயல் தமிழகத்துக்கு சாதகமாக இருந்தால், நாளை (26-10-2025) விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மறுதினம் (27-10-2025) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூரில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இந்த புயல் காரணமாக, சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






