வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடையும் ‘மோந்தா'.. எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..?

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மேலும் உருவெடுக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு புயல் சின்னமாக மாறாமல் ஏமாற்றிய நிலையில், 2-வது நிகழ்வு தற்போது வலுவடைந்து வருகிறது. அந்தவகையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இது தற்போது சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 960 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவுக்கு 970 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. அதனைத் தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கிறது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த ‘மோந்தா' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தீவிரப் புயலாகவும் வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப் புயலாக நாளை மறுதினம் மாலை, இரவு நேரத்தில் கடக்கக் கூடும் எனவும், அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வரையில் இருக்கும் எனவும் ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயல் சின்னம், தமிழகத்தையொட்டி அதாவது சென்னையையொட்டி கடந்து ஆந்திராவுக்கு பயணித்தால் கனமழைக்கும், அப்படியே விலகிச் சென்று கடல் வழியாகவே ஆந்திராவுக்கு சென்றால் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..?
இந்த நிகழ்வால் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும்,
நாளை ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும்,
நாளை மறுதினம் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் உருவாக உள்ளதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்கள் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.






