சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை மையம் தகவல்

11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இந்நிலையில் மோந்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது காக்கிநாடாவிலிருந்து 270 கி.மீ தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது என்றும், இது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், காலை முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி
சென்னை,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்,
ராணிப்பேட்டை,
திருவள்ளூர்,
திருவண்ணாமலை,
வேலூர்,
விழுப்புரம்,
கன்னியாகுமரி,
தென்காசி,
திருநெல்வேலி
ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






