மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாக்க இஸ்ரேல் திட்டம்?
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் அனைத்து பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Live Updates
- 2 Oct 2024 11:06 AM GMT
இஸ்ரேல் - ஈரான் நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
- 2 Oct 2024 11:06 AM GMT
லெபனானுக்கு ரஷியா ஆதரவு
லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய தயாராக உள்ளோம் என்று ரஷியா கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு ரஷியா ஆதரவு தெரிவித்துள்ளது.
- 2 Oct 2024 11:05 AM GMT
ஐ.நா.பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் தடை
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தங்களது நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது. ஈரானுக்கு கண்டனம் தெரிவிக்காமல் தங்கள் மீது மட்டும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குற்றம் சுமத்துவதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 2 Oct 2024 10:21 AM GMT
பதற்றம் குறைந்து பேச்சுவார்த்தை நடைமுறைக்கு வரும் என்றும், தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் சவுதி அரேபிய பொருளாதாரத் துறை மந்திரி பைசல் அல்-இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்தார்.
- 2 Oct 2024 9:14 AM GMT
இஸ்ரேலின் ஹைபா நகரின் வடக்கே உள்ள பகுதிகளை குறிவைத்து இன்று மிகப்பெரிய ஏவுகணை ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
- 2 Oct 2024 9:11 AM GMT
லெபனானில் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறும்படி, இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- 2 Oct 2024 7:32 AM GMT
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைக்க இஸ்ரேல் திட்டம்?
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் ஓரிரு தினங்களில் தொடங்கலாம் என்று ஆக்சியஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- 2 Oct 2024 7:30 AM GMT
ஈரானுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என இந்தியர்களை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
- 2 Oct 2024 7:28 AM GMT
சண்டையில் அமெரிக்கா தலையிடவேண்டாம்.. ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த சண்டையில் அமெரிக்காவை தலையிடவேண்டாம் என்று ஈரான் கூறியிருக்கிறது. இதுபற்றி வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்ச்சியின் தகவலை மேற்கோள் காட்டி ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா, நேற்று இஸ்ரேல் நோக்கி சென்ற பல ஏவுகணைகளை தடுக்கும் கூட்டு தற்காப்பு முயற்சியில் பங்கு வகித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கியுள்ளது.
- 2 Oct 2024 7:19 AM GMT
நேற்று நடத்திய தாக்குதலின்போது இஸ்ரேலிய குடிமக்களை குறிவைப்பதை ஈரான் தவிர்த்துவிட்டதாக ஈரான் ராணுவ அதிகாரி முகமது பாகேரி தெரிவித்தார். அதேசமயம், ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து பகைமை கொண்டிருந்தால் பொதுமக்களை குறிவைப்பதற்கு சாத்தியம் உள்ளது என்றும் கூறினார்.