ஈரான் மீதான தாக்குதல் எதிரொலி; அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்,
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், "உலகில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வரலாற்றை மாற்றி அமைக்கப் போகிறது" என்று தெரிவித்தார்.
அதே சமயம், அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஈரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், "அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்" என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நியூயார்க் நகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் உள்ள முக்கிய இடங்கள், மத வழிபாட்டுத் தளங்கள், கலாசார மற்றும் தூதரக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வாஷிங்டன், கொலம்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.