ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது ; டொனால்டு டிரம்ப்

ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மலேசியா சென்றுள்ளார்.
வாஷிங்டன்,
ரஷியா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
குறிப்பாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட வலியுறுத்தி இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. இதனால், வர்த்தக போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மலேசியா சென்றுள்ளார். ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த டிரம்ப் அப்போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா படிப்படியாக குறைத்து வருகிறது. அதேவேளை, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டது’ என்றார்.






