நாளை முடிவடையும் காலக்கெடு.. புதின் இறங்கி வருவாரா..?

போரை நிறுத்துவது குறித்து டிரம்பின் தூதர் புதினிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் முடிவுக்கு வராததால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் ஆத்திரம் மற்றும் விரக்தியில் உள்ளார். இந்த போரை நிறுத்தி வருகிற 8-ந்தேதிக்குள் (நாளை) அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளையும், அந்த நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரியும் விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்து உள்ளார்.
டிரம்ப் விதித்துள்ள இந்த காலக்கெடு நாளை முடிவடையும் நிலையில், அவர் அனுப்பிய சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் நேற்று மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போது போரை நிறுத்துவது குறித்து டிரம்பின் தூதர் புதினிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பை கிரெம்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது. எனினும் பேச்சுவார்த்தை குறித்து மேலும் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.
முன்னதாக உக்ரைனின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவிலும் ரஷியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில்2 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மத்தியில் டிரம்பின் சிறப்பு தூதர், புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.






