கோவையில் 12-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


கோவையில் 12-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x

கோப்புப்படம்

கோவையில் 12-ந் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சென்னை,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், தேசிய அளவிலான அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் தமிழகத்தை நோக்கியே பிரசாரத்துக்காக வந்து செல்கிறார்கள்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திரமோடி ஏற்கனவே 6 முறை தமிழகம் வந்து சென்றுள்ளார். மீண்டும் 4 நாட்கள் தமிழகம் வர இருக்கும் அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான ராகுல்காந்தியும் 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 12-ந்தேதி தமிழகம் வர இருக்கிறார். அன்றைய தினம் நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இதற்கிடையே கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யுடன் இணைந்து 12-ந் தேதி அன்று 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிப்பாளையம் எல் அண்டு டி பை-பாஸ் ரோட்டில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story