அ.தி.மு.க. ஆட்சிதான் பொற்கால ஆட்சி - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அ.தி.மு.க. ஆட்சிதான் பொற்கால ஆட்சி - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 31 March 2024 1:19 PM GMT (Updated: 31 March 2024 2:46 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அதன் பின்னர் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. இல்லையென்றால் தமிழ்நாடு சர்வாதிகார மாநிலமாக மாறிவிடும். உங்களுடன் தொண்டனாக இருப்பதுதான் எனக்கு பெருமை.

பத்தாண்டு காலம் அதிமுக சிறப்பாக ஆட்சி செய்தது. அதிமுக கூட்டத்தில் தான் எழுச்சி இருக்கிறது; வெற்றி இருக்கிறது. சாமானியனும் முதல்-அமைச்சராக முடியுமென்றால் அது அ.தி.மு.க.வில் மட்டுமே. அ.தி.மு.க. மக்களுக்கான கட்சி. தி.மு.க.வில் யாரும் மேல்நிலைக்கு வர முடியாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாட்டு மக்களை பற்றி கவலையில்லை, வீட்டு மக்களை பற்றியே கவலை. மக்களை சந்தித்தால்தான் அவர்கள் அடையும் துயரங்கள் பற்றி முதல்-அமைச்சருக்கு தெரியும். தமிழகத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சிதான் பொற்கால ஆட்சியாகும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் தேர்தலில் அடையும் தோல்வியோடு தி.மு.க.வின் சரித்திரம் முடிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story