'அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போன்றது; அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது' - செல்லூர் ராஜு


அ.தி.மு.க. பீனிக்ஸ் பறவை போன்றது; அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது - செல்லூர் ராஜு
x

அண்ணாமலைக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது கூற்று வேடிக்கையானது என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை,

தேனி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. டி.டி.வி.தினகரன் வசமாகும்" என்று தெரிவித்தார்.

அண்ணாமலையின் பேச்சுக்கு அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. தலைமை மாறும் என்று அண்ணாமலை பேசியது குறித்து மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"அண்ணாமலைக்கு நான் ஏற்கனவே பலமுறை பதிலடி கொடுத்துவிட்டேன். அவர் என்ன ஜோசியரா? மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகுதான் அவரைப் பற்றி தெரியும். அவருக்கு அரசியலே தெரியாது.

அ.தி.மு.க. ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்றது. பல சோதனைகளை கடந்து வந்துள்ள அ.தி.மு.க. என்ற இந்த இயக்கமானது, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தியாவிலேயே 3-வது பெரிய இயக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் தனிப்பெரும் இயக்கமாக உள்ளது.

அண்ணாமலையின் கூற்று வேடிக்கையானது. அவர் இன்று நகைச்சுவையாக மாறிவிட்டார். கோவையில் அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இவ்வாறு பேசி வருகிறார். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அண்ணாமலை எங்கு இருக்கிறார் என்பது தெரியாது."

இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.




Next Story