நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசில் இணைந்த பா.ஜனதா தலைவர்


நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசில் இணைந்த பா.ஜனதா தலைவர்
x

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு பா.ஜனதா மதிப்பு கொடுக்கவில்லை என்று தேஜஸ்வினி கவுடா தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான தேஜஸ்வினி கவுடா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமையகத்தில், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநில தலைவர் பவன் கேரா முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

முன்னதாக 2004 -2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக தேஜஸ்வினி கவுடா இருந்தார். 2014ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்த தேஜஸ்வினி கவுடா 2018ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பா.ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார். அவரது எம்.எல்.சி. பதவிக்காலம் ஜூன் 2024 இல் முடிவடைய இருந்தது. இந்த சூழலில் தற்போது அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வினி கவுடா, "அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு பா.ஜனதா மதிப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வெறும் வார்த்தைகளோடு மட்டுமல்லாமல், செயல் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகவும் உண்மையுடன் பணியாற்றவுள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "கர்நாடக அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் காங்கிரசில் இணைந்ததில் மகிழ்ச்சி. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தேஜஸ்வினி கவுடா சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று நம்புகிறோம். தேஜஸ்வினி 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து பல்வேறு பிரச்னைகளில் குரல் கொடுத்து வருகிறார். அவர் காங்கிரசுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி" என்று அவர் கூறினார்.


Next Story