வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது. சமூகநீதி காற்றில் பறக்கக்கூடாது. மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகத்தான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

பிரதமர் மோடியால் மக்களிடம் தன்னுடைய ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளைச் சொல்லி, அதன் மூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா? என்று முயற்சி செய்கிறார்.

அதுதான் கச்சத்தீவு பிரச்சினை. இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜனதா பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜனதா மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா சுப்ரீம்கோர்ட்டில் என்ன கூறியது? ''கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்'' என்று கூறியது. இந்த 10 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்கு பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வரவில்லை. நேரு காலத்தில் நடந்தது - இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?

நீங்கள் (பிரதமர்) கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். 'நீட்' விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன். அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, ''கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்'' என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா? எத்தனை கதைகள். எத்தனை நாடகங்கள்.

முதலில், ஆர்.டி.ஐ. விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்?

இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர், ''2015-ல் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை'' என்று, பா.ஜனதா அரசு தகவல் கொடுத்திருக்கிறது. இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக்கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?

மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் ஆர்.டி.ஐ. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களை கொடுக்கவில்லை.

சுப்ரீம்கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜனதா, அரசு இப்போது ஆர்.டி.ஐ. மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்? பா.ஜனதாவை சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத்துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?

நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா?

30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீன மொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவை பற்றி பேசலாமா?

நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்ததும் எவ்வளவு பெரிய தவறு என்று பா.ஜனதா விரைவில் உணரத்தான் போகிறது.

சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம். இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தரவில்லை. நாளை (இன்று) காலை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போடப்போகிறோம்"

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story