மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
காஞ்சிபுரம் கரசங்கால் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்.சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது.
இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். "நான் மத்திய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கினீர்களா? என எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்' என்ற படத்திற்கேற்ப, பா.ஜ.க. அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும். பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்று இன்றுவரை பழனிசாமியால் திட்டவட்டமாக கூறமுடியவில்லை. பா.ஜ.க.,விடம் இருந்து விலகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார்.அ.தி.மு.க. அரசுக்கு விருது கொடுத்தது மத்திய அரசுக்கு அடிமையாக இருந்ததற்குதான்.
பதவி சுகத்திற்காக தமிழக நலனை மத்திய அரசிடம் அடகு வைத்ததில் அ.தி.மு.க .அரசு நெம்பர் 1. பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம் தேதி 40க்கு 40 என்ற விருது கிடைக்கும் பழனிசாமி அவர்களே வெய்ட் அண்ட் சி.
ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1, ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1, தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1, ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1, கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1அனைத்து சமூக, பொருளாதாரக்குறியீடுகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
பழனிசாமி அவர்களே இதெல்லாமே நாங்கள் சொன்னவை அல்ல, மத்திய அரசின் புள்ளி விபரங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, தி.மு.க. ஆட்சியமைந்ததும் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு, ஜி.எஸ்.டி.,க்கு பதில் புதிய சட்டம் போன்றவை தேர்தல் அறிக்கையில் உள்ளன. மக்களவைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்.
முதல்-அமைச்சராக இருந்த மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார். தி.மு.க.,வுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப் படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர்.
பா.ஜ.க.,வுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், வரலாறு திருத்தி எழுதப்படும். அறிவியல் பின்னுக்கு தள்ளப்பட்டு பிற்போக்கு கதைகள் புகுத்தப்படும். மக்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படும். மக்களின் உரிமைகள் பறிக்கப்படும். அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் காற்றில் பறக்கவிடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்.ன் சித்தாந்தம் நாட்டை ஆளும். இதையெல்லாம் தடுப்பது உங்கள் வாக்குதான். பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. பெண்களை மதிப்பதாக வீர வசனம் பேசுபவர், மகளிருக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.