டீ குடிக்க காசில்லை.. தண்ணீர் குடித்து பிரசாரம்- செல்வப்பெருந்தகை பேட்டி


டீ குடிக்க  காசில்லை.. தண்ணீர் குடித்து பிரசாரம்- செல்வப்பெருந்தகை பேட்டி
x

காங்கிரஸ் வேட்பாளர்கள், டீ செலவுக்கு கூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரை குடித்து கொண்டு பிரசாரம் செய்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கைக்கான தமிழாக்கத்தை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் பெற்றுக் கொண்டார்.

பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடையாக அர்ப்பணித்துள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்படி, பா.ஜனதா மற்றும் மோடியால் எதையாவது சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா வேட்பாளருக்காக கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவே ஒரு எதிர்க்கட்சி அல்லது மாநில கட்சி வேட்பாளரிடம் இருந்து எடுத்து இருந்தால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. சும்மா இருந்திருப்பார்களா? மோடியும், நிர்மலா சீதாராமனும் இதுவரை வாய் திறக்கவில்லை.

தமிழகத்தில் பெரிய மாற்றம், பெரிய எழுச்சி இருக்கிறது. நோட்டாவுக்கு மேலே வர அண்ணாமலை முயற்சிக்கட்டும். பா.ஜனதாவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ செலவுக்கு கூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரை குடித்து கொண்டு பிரசாரம் செய்கிறார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story