உங்களுக்கு ஒருவரும் உதவ முடியாது... ராகுல் காந்தி பற்றி பிரசாந்த் கிஷோர் கூறியது என்ன?


உங்களுக்கு ஒருவரும் உதவ முடியாது... ராகுல் காந்தி பற்றி பிரசாந்த் கிஷோர் கூறியது என்ன?
x
தினத்தந்தி 8 April 2024 11:03 AM GMT (Updated: 8 April 2024 11:06 AM GMT)

காங்கிரஸ் கட்சியை 5 ஆண்டுகளுக்கு வேறு எவரேனும் வழிநடத்தும் பணியை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதன்பின்னர், அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வயநாடு தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி விலகினார்.

அப்போது அவர், தலைவர் பதவியில் இருந்து விலகி, வேறு யாரேனும் இந்த பணியை செய்வதற்கு விட்டு விடுவேன் என்று கூறினார். இந்நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்கிறது. இதில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வுக்கு பிரதமர் வேட்பாளராக பிரதமர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த முறை 370 தொகுதிகளை கைப்பற்றுவோம் என அவர் உறுதிப்பட கூறியிருக்கிறார். அதற்கேற்ப தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். தீவிர பிரசாரம், பொது கூட்டம், பேரணி என அக்கட்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், இந்தியா கூட்டணியில் அதுபோன்று பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் முகமும் அடையாளம் காட்டப்படவில்லை. இந்த முறை தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் தங்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. காங்கிரஸ் கட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அதிருப்தியுடன் சில இடங்களை பெற வேண்டிய நிலைக்கும் காங்கிரஸ் தள்ளப்பட்டது.

இந்த சூழலில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு சாதக முடிவுகள் கிடைக்காவிட்டால், ராகுல் காந்தி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராகுல் காந்தி, அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், அவருடைய கட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.

அவரால், விலகி செல்லவோ அல்லது வேறு யாரையேனும் காங்கிரசை வழிநடத்தி செல்ல அனுமதிக்கவோ முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அவரால் திறம்பட செயலாற்ற முடியவில்லை. இருந்தபோதும் அவரால் அதில் இருந்து விலக முடியவில்லை. என்னை கேட்டால், இது கூட ஜனநாயக விரோதமே என்றார்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு வேண்டிய வளர்ச்சிக்கான மறுஆய்வு திட்டங்களை தயாரித்து கொண்டு சென்றபோதும், அதன் தலைமைக்கும் கிஷோருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளால், அதில் இருந்து கிஷோர் விலகி விட்டார்.

இந்நிலையில் கிஷோர் தொடர்ந்து கூறும்போது, எந்தவித வெற்றியும் பெறாமல், கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வேலையை செய்து கொண்டிருக்கும்போது, அதில் இருந்து சற்று ஓய்வெடுப்பதில் தவறேதுமில்லை.

வேறு எவரேனும் 5 ஆண்டுகளுக்கு கட்சியை வழிநடத்தும் பணியை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். உங்களுடைய தாயார் அதனை செய்தவர் என்று கிஷோர் கூறியுள்ளார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அரசியலில் இருந்து விலகி, 1991-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவை பொறுப்பேற்க செய்த விசயங்களை கிஷோர் குறிப்பிட்டு உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள சிறந்த தலைவர்களின் முக்கிய அம்சமே, அவர்கள் எதில் முழுமை பெறாமல் இருக்கிறோம் என்பது பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதற்கான வேலைகளில் திறம்பட செயல்படுவார்கள்.

ஆனால், தனக்கு எல்லாம் தெரியும் என ராகுல் காந்தி இருப்பதுபோல் தெரிகிறது. உதவிக்கான தேவையை நீங்கள் அங்கீகரிக்கவில்லை எனில், உங்களுக்கு ஒருவரும் உதவ முடியாது என கூறிய கிஷோர், அவர் என்ன நினைக்கிறோரோ அதனை செயல்படுத்த கூடிய நபரே தனக்கு தேவை. அதுவே சரியாக இருக்கும் என நம்புகிறார். அது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் பலரிடம், தனிப்பட்ட முறையில் கேட்டால் கட்சியில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என ஒப்பு கொள்வார்கள். கூட்டணி கட்சிகளுடன் ஒரு தனி தொகுதி பற்றியோ அல்லது தொகுதி பங்கீட்டிலோ கூட முடிவு எடுக்க முடியவில்லை என்று கூறுவார்கள்.

இதற்காக எவரோ ஒருவரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். ராகுல் காந்தியுடன் இணங்கிப்போக வேண்டிய நிலை உள்ளது என சிலர் கூறுகின்றனர் என கிஷோர் சுட்டி காட்டினார்.

எனினும், கட்சியின் ஒரு பிரிவு தலைவர்களோ, இதற்கு எதிர்பதத்தில் கூறுகின்றனர். அது என்னவெனில், ராகுல் காந்தி முடிவுகளை எடுப்பதில்லை. அவர் முடிவெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என கூறுகின்றனர்.

1984-ம் ஆண்டில் இருந்து வாக்கு பகிர்வு, மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் காங்கிரஸ் சரிவை கண்டு வருகிறது என கூறியுள்ள கிஷோர், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அதன் செயல்பாடுகளில் கட்டமைப்பு குறைபாடுகளை கொண்டுள்ளது. அதனை சரிசெய்வது வெற்றிக்கு மிக முக்கியம் என கூறுகிறார்.

ஆனாலும், ஒரு கட்சியாக மட்டுமே காங்கிரசை பார்க்க முடியாது என கூறிய அவர், அதன் வரலாற்றில் பரிணாம வளர்ச்சி பெற்று, மறுபிறவி எடுத்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.


Next Story